திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு, கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், திமுகவில் கட்சிப் பொறுப்ப பெற்ற முதல் பிராமணர் இவர் என்பதுதான். தேர்தல் நெருங்கி வருவதால், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் வியூகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை இது காட்டுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Continues below advertisement


திமுக கல்வியாளர் அணியின் துணைத் தலைவரான மைத்ரேயன்


கடந்த ஆகஸ்ட் மாதம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன். இந்த நிலையில், அவரை திமுக கல்வியாளர் அணியின் துணைத் தலைவராக நியமித்து  இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.


அதிமுக சார்பில், 2002-ம் ஆண்டு முதல் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில், அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மைத்ரேயனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


திமுகவில் கட்சிப் பொறுப்பு பெற்ற முதல் பிராமணர் மைத்ரேயன்


இதன் மூலம், திராவிட கட்சியில் நிறுவனப் பதவியை பெற்றுள்ள முதல் பிராமணர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மைத்ரேயன். ஏனென்றால், பாரம்பரியமாக நாத்திகம் மற்றும் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருக்கும் ஒரு கட்சியில், ஒரு பிராமணர் இத்தகைய பதவி பெறுவது சற்றே கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.


தகுதி அடிப்படையில் புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் மைத்ரேயன், 2026 சட்டமன்ற தேர்தலில், ‘தளபதி‘(மு.க. ஸ்டாலின்) தலைமையில் மகத்தான வெற்றியை பெற அயராது உழைப்பேன் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






அதிமுகவில் சேர்வதற்கு முன், பாஜகவில்தான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் மைத்ரேயன். பின்னர், அதிமுகவிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் நம்பகமான துணைத் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.


ஜெயலலிதா மறைவிற்குப் பின், பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிமுக தலைவர்கள், அதாவது மைத்ரேயன், முன்னாள் டிஜிபியும், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான நடராஜன் போன்றோருக்கு முக்கியத்துவம் குறைந்தது. இந்நிலையில் தான், அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் மைத்ரேயன்.


தேர்தல் நேரத்தில் மு.க. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்


இந்நிலையில், மைத்ரேயனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கியிருப்பது, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மாஸ்டர் பிளானாக பார்க்கப்படுகிறது.


ஆம், தேர்தல் நெருங்கி வருவதால், பிராமணர்களின் வாக்குகளை பெற இது உதவும் என்பதுதான் அவருடைய கணக்கு. பொதுவாக, பிராமண சமூகத்தின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கு கிடைக்காது என்பதும், அவை அதிமுகவிற்கு தான் போய் சேரும் என்பதும் காலம் காலமாக இருக்கும் ஒரு கூற்று.


இதை மாற்றி, பிராமணர்களின் வாக்குகளை திமுக பக்கம் திருப்பவே, சில நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் மு.க. ஸ்டாலின். அதில் ஒன்றுதான் மைத்ரேயனின் கட்சிப் பதவி. மறுபுறம், பிராமணர்களுக்காக தனிக் கட்சி தொடங்குவேன் என்று கூறிவந்த நடிகர் எஸ்.வி. சேகரின் நாடகத்தை காணச் சென்றது முதல், அவர் வசிக்கும் தெருவிற்கு அவரது தந்தை வெங்கட்ராமன் பெயரை சூட்டி, அவரை தங்கள் பக்கம் இழுத்து, திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று அவரையே கூற வைத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.


இதன் மூலம், பிராமணர்களின் வாக்குகளை கணிசமாக திமுக பக்கம் வர வைப்பது தான் அவரது பிளான். இப்படி, இன்றைய சூழலில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்தான் எடுபடும் என்பதை புரிந்துகொண்டு,  அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இத்தகைய அரசியலை கையிலெடுத்துள்ளார் ஸ்டாலின் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.