இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று  மீனவர் நல மாநாடு நடைபெறும் நிலையில், இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். 


முதலமைச்சர் ஸ்டாலின் பயணம்


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அன்று மாலை மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.


இராமநாதபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் 


இரவு மதுரையில் தங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று காலை கார் மூலம் இராமநாதபுரம் சென்றார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் செல்லும் வழியில் சிலைமான் கிராமத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போகும் வழியில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். ஒவ்வொரு ஊரிலும் முதலமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.


ராமநாதபுரம் சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.  இதில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார். 


இன்று  மீனவர் நல மாநாடு


தொடர்ந்து நேற்று மாலை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் நல மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இதில் காலை 10 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. பிரமாண்ட பந்தல் போடப்பட்டு மிகப்பெரிய ஏற்பாடுகள் மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வருகையையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.