சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைறபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்றார். அப்போது, அந்த விழாவில் முதல்வர் பேசியதாவது,


“ கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட காரணத்தால் என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் என்னுடைய பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். குருநானக் கல்லூரி தொடங்க 25 ஏக்கர் நிலம் அப்போது அரசால் கொடையாக வழங்கப்பட்டது. அதனை வழங்கியது தி.மு.க. ஆட்சி.  அன்று வழங்கிய உதவி வீண்போகவில்லை. அதற்குசாட்சிதான் இந்த 50வது ஆண்டு விழா.


கலைஞர் தொடங்கிய எதுவுமே சோடை போனதாக வரலாறு கிடையாது. குருநானக் கல்லூரி அமைந்திருக்கின்ற இந்த வேளச்சேரி பகுதியில்தான் நான் மேயராக இருந்தபோது குடியிருந்தேன். இந்த கல்லூரியில் ஏழாண்டு காலம் நடைபயிற்சி செய்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஷட்டில்கார்க் விளையாடியிருக்கிறேன்.


கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில், பேரிடர் காலங்களில் பெரிதும் உதவி செய்யக்கூடிய, மக்களுக்கு பல வகைகளில் துணை நிற்கக்கூடிய கல்லூரிகளில் முதல் கல்லூரி குருநானக் கல்லூரியாகதான் இருக்கும். சென்னையில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கக்கூடிய சீக்கிய மக்கள் இங்கு சிறுபான்மை சமூகமாக இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் ஆற்றிய கல்விப்பணி என்பது பெரும்பான்மையை விட மகத்தானதாக அமைந்திருக்கிறது. அனைவரும் சரிசமம் என்பதை மனதில் வைத்து அனைவரும் படிக்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


அண்மைக்காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறபோது எனக்கு வேதனையாக உள்ளது. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக கல்விச்சேவையாக கருத வேண்டும். மாணவச் செல்வங்கள் படங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை நீங்கள் அளிக்க வேண்டும்,


எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.


மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவே, மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனையை பெற்றுத்தரும்.


எந்த சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் எத்தனையோ சோதனைகளை கடந்துதான் வந்திருக்கிறீர்கள். சோதனைகளை சாதனைகளாக்கி வளர்ந்தாக வேண்டும். படிப்போடு, கல்வி நிறுவனங்கள் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகள் பெற்றதோடு பெற்றோர்கள் பணி எப்படி முடியாதோ? அதேபோல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்துவிடாது.


மாணவச்செல்வங்களே தற்கொலை எண்ணம் கூடவே, கூடாது. தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை கூடாது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவ, மாணவியர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். மாணவர்களும். உங்கள் பிரச்சினைகளையும், நோக்கங்களையும் கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.”


இவ்வாறு அவர் பேசினார்.


கள்ளக்குறியிச்சில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண