மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க தான் தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு குறிப்பாணையிலும், உங்களுடனான எனது சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கான  மெட்ரோ ரயில் சேவையை பலமுறை கோரியுள்ளேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பாளர்களில் ஒருவராக, இந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்.


மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதற்கு பங்களிப்பதில் சரியான நோக்கம் மற்றும் நியாயமான நடவடிக்கையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அவற்றின் முக்கியத்துவத்தை விளக்க எனது குழுவுடன் உங்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையே இந்தியாவின் வளர்ச்சி! அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என அவர் கூறியுள்ளார். 


சிக்கலில் மெட்ரோ திட்டம் 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் வளர்ந்த நகரங்களாக அறியப்படும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் சமர்பித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை, மாறாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


மக்கள் தொகை, சாலை போக்குவரத்து பயணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்களை மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசியலாக்குவது துரதிஷ்டவசமானது எனது மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்புறத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருந்தார். மேலும் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த பெரும் நிதி ஒப்புதலை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்துவிட்டார் எனவும் அவர் விமர்சித்திருந்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தில், “மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையை குறிப்பிட்டது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பி இருந்தால் நிச்சயம் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கும்” என அவர் கூறியுள்ளார்.