தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று விருதுநகர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
உயர்கல்வி சதவீதம்:
“ விருதுநகர் மண் காமராஜரை நமக்கு வந்துள்ளது. 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியதில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சாஸ்தாகோவில் திட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மாவட்டந்தோறும் கள ஆய்வைத் தொடங்கியுள்ளேன். கடந்த 3 ஆண்டு திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்தேன். நடந்து கொண்டிருக்கும் பணிகளைப் பற்றி கேட்டேன். நம் சமூக நலத்திட்டங்கள் மக்களிடம் எப்படி சென்றிருக்கிறது என்பதை பார்த்தேன். விருதுநகர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்தவர்களில் 95 சதவீதத்திற்கு மேல் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இந்திய சராசரி 33 சதவீதம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் 60 சதவீதம் ஆகும். அது நமக்கு இருக்கும் பெருமை ஆகும்.
உங்கள் மகிழ்ச்சியே எனக்கு பாராட்டு:
திராவிட மாடல் கொண்டு வந்துள்ள புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களால் விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவு உயர்கல்வி சேர்வது முக்கிய சாதனையாக உள்ளது. 2021ம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை 3 ஆண்டுகளில் 10 லட்சத்து 3824 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது இது மிகப்பெரிய சாதனை. நில உரிமையை வழங்குவது திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திராவிட இயக்கம் சமூக சீர்த்திருத்த இயக்கம் மட்டுமில்ல. இதற்கு சமதர்ம கொள்கை உண்டு. சுயமரியாதை சமூகம் என்று இதை பெரியார் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் சமநிலையும், சமூகத்தில் சமூகநீதியையும் வழங்கப்பட வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம். அதிகப்படியான இடங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கிய ஆட்சி தி.மு.க. உங்கள் முகத்தில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு.
திருப்தி இல்லை:
இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிகையில் இந்தியாவின் சக்திவாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரும் குறிப்பிட்டுள்ளனர். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. இந்த பெருமையை எனக்கு வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்களே. உங்கள் அன்பும், ஆதரவுமே இந்த ஸ்டாலினின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த நான் என்னுடைய சக்தியையும் மீறி போராடுவேன்.
இந்த உழைப்போட பலன்தான் எல்லா புள்ளிவிவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலிக்கிறது. ஆவணங்களிலும், பேப்பர்களிலும் முதலிடம் வந்துவிட்டோம் என்று நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. ஏனென்றால், நமக்குப்பின்னால் நம்மை முந்தி வெற்றி பெற பலபேர் வருகிறார்கள். இன்னும் நான் வேகமாக ஓடனும் என்றே நினைக்கிறேன். இதைத்தான் மற்ற அமைச்சர்களிடமும், அரசு அலுவலகத்தில் எதிர்பார்க்கிறேன். “
இவ்வாறு அவர் பேசினார்.