வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். அந்த குழு கடந்த மார்ச் மாதம் சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கைகளை அளித்தது.
இப்படியான நிலையில் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. புயல், மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்தது. வழக்கம்போல தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம், திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றனவே? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘முதலில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அறிக்கை விடும் எதிர்க்கட்சிகள் பேரிடர் களத்திலும் இல்லை பாதிக்கப்பட்ட . மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும்ஈடுபடவில்லை. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல திட்டங்களைச் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது. இன்னும் செயல்படுத்தவுள்ளது.
திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் எங்கள் அரசு பொதுவெளியில் வெளியிடும். என்னைப் பொறுத்தவரை, இந்த அரசு ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற வகையில் செயல்படும் அரசு. இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நாங்கள் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.