தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.


மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்:


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.


இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தமிழக மீனவர்கள்:


அக்கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 18.6.2024 ( நேற்று) கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமில்லாமல், மீனவ சமுதாயத்தினர் இடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாக கவலைப்பட தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடி படகுகளும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலமாக இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Crime: தலைக்கேறிய கோபம்! விமான நிலைய ஊழியரை கடித்து வைத்த பெண் பயணி!


மேலும் படிக்க: திடீர் கொத்துக்கொத்தாக கீழே விழுந்த காகங்கள்; காப்பாற்ற முயன்ற இளைஞர்கள் - கடைசியில் நேர்ந்த சோகம்