ஜப்பான் செல்வதற்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர்களுடன் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில்  2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்திற்கு தேவையான தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் வகையில்  முதலமைச்சர் 2 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம், பயணம் மேற்கொண்டார். 


அங்கு அவருக்கு அரசு சார்பிலும், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சிங்கப்பூரில் வசித்து வரும்  முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்  அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 


அப்போது சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்குமான தொடர்புகள் குறித்தும், ஆராய்ச்சி முடிவுகள் பற்றியும் பேசினார். மேலும் சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லி குவான்யூவுக்கு தமிழ்நாட்டில் மன்னார்குடியில்  நினைவுச்சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கிடையில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


இதனையடுத்து அங்கிருந்து நேராக விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 நாட்கள் பயணமாக ஜப்பான் செல்கிறார். அதற்காக விமானநிலையம்  செல்லும் வழியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள முருகன் இட்லி கடைக்கு அவர் சென்றார். அங்கு தேனீர் அருந்தியதோடு மட்டுமல்லாமல் அங்கே வந்திருந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.