திருப்பத்தூர் அருகே உள்ள வாணியம்பாடியில் தைப்பூச திருவாழவின் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவராண உதவி அறிவித்துள்ளார்.


வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் தொகையும்,  மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மூன்று பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் தொகை நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் இரங்கல்: 


இந்த துயர சம்பத்தைக் கேள்வியுற்று நான் மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரித்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


சம்பவத்தின் பின்னணி: 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ஜின்னா பாலம் அருகில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக தகவல்கள்  வெளியானது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஆயிரத்துக்கு  மேற்பட்ட பெண்கள் திடீரென தனியார் நிறுவனம் முன்பு குவிந்துள்ளனர். அப்போது தனியார் நிறுவனத்தினர் புடவைகளை வாங்க இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பெண்களின் கூட்டம் அதிகரிக்க தனியார் நிறுவனத்தினர் புடவைகளுக்கு முதலில் டோக்கன் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்கள்.  அப்போது  அங்கு குவிந்து இருந்த பெண்கள் நமக்கு டோக்கன் கிடைக்காமல் போய் விடும்  என்ற எண்ணத்தில் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு சென்றுள்ளார். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கிக்கொண்டனர்.  ஒரு சில பெண்கள் மூச்சு விடமுடியாமல் திணறியுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் ராசாத்தி, வள்ளியம்மா, சின்னம்மா, நாகமா ஆகிய நான்கு பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்த மற்றும் மயக்கமடைந்தவர்களை அங்கு இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் தீவர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது:


இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் நிகழ்ச்சி குறித்து எந்தவித முன் அனுமதியும் காவல்துறையிடம் பெறவில்லை என்றும் நிகழ்ச்சிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இலவச வேட்டி சேலைக்கான டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் பெண்கள் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


 நிதியுதவி அறிவிப்பு: 


இந்நிகழ்வு குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மாரிமுத்து மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சேர்ந்து அளித்த பேட்டியில் கூறியதன் விவரம்: 


 வாணியம்பாடியில் நடந்த இந்நிகழ்வு  குறித்து உரிய விசாரணை மேற்க்கொள்ளப்படும் எனவும் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும்,


 இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐயப்பனிடம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்க்கொண்டு வருவதாக தெரிவித்தனர்..


மேலும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஏ.வ.வேலு சார்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 ஆயிரம் என 1 லட்சம் ரூபாயை வழங்கினர்.