கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. அந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் 2 ஆண்டுகளாக அத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கு அப்போதிருந்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “நிதி பிரச்சினை” என விளக்கம் கொடுத்திருந்தார். 


இதனிடையே கடந்த மார்ச்- ஏப்ரல் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதன்படி செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இந்த திட்டம் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 


இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் திட்டம் செயல்படுத்தப்படும் முறை, தகுதியுள்ள பயனாளர்களை எப்படி தேர்வு செய்வது போன்றவை குறித்து முடிவெடுக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால், இத்திட்டத்துக்கு  ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என பெயரிடப்பட்டது. 


பின்னர் இரண்டு கட்டமாக இந்த திட்டத்துக்கு விண்ணப்பங்களை வழங்கி தகுதியானவர்களை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்பங்கள் ஜூலை 27ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டு வருகிறது. இன்றுடன் (ஆகஸ்ட் 4)  இப்பணிகள் முடிவடைகிறது. 


முதல்கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் 79.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே 2 ஆம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை விநியோகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் விண்ணப்பித்தவர்களின் நிலை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.