முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கியுள்ளார். கோவையில் கள ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவிகளை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
முதலமைச்சர் முன்பே கடவுளே அஜித்தே:
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் ரூபாய் 300 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையேற முயற்சித்தபோது, அங்கே கூட்டத்தில் இருந்த மாணவர்களில் சிலர் கடவுளே அஜித்தே என்று கோஷங்களை எழுப்பினர். அவர்கள் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை எழுப்பினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குவியும் கண்டனங்கள்:
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுடன் அவர் கார் ரேஸிங்கிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் கோஷங்களை எழுப்பி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கோஷத்தை சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடுவதற்காக மட்டுமின்றி, பொது வெளியில் நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். தனிப்பட்ட வீடியோக்களுக்கு இது ரசிக்கும் வகையில் இருந்தாலும், பொது வெளியில் இந்த கோஷங்களை அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் எழுப்புவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்:
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் இசை வெளியீட்டு விழாவில் இதுபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் எழுப்பப்பட்டது. தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியிலும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் எழுப்பப்பட்டதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வலிமை படத்திற்கு நீண்ட நாட்களாக அப்டேட் ஏதும் இல்லாமல் இருந்து வந்த சூழலில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.