தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. மே மாதம் பொறுப்பேற்றது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக, கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021-ஆம் ஆண்டு சட்டசபையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில், கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக 5 ஆயிரத்து 570 வழக்குகள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.
முன்னதாக, தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைந்தது. சுமார் 4 1/2 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தற்போது எட்டுவழிச்சாலை, நீட் தேர்வு, மதுபானக்கடைகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.