பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கோயம்புத்தூர் முதலமைச்சர் ஸ்டாலின் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பரில் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று நம் அன்னை மொழியாம் தமிழ் மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் செம்மொழி எனும் பெருமை வழங்கி மத்தியஅரசு ஆணை பிறப்பித்தது.அதைக் கொண்டாடும் வகையில் கலைஞர் மு.கருணாநிதி கோவை மாநகரில் உலகின் தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கொண்டாடப்பட்டது. அப்போது கோவை மாநகரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று கலைஞர் மு.கருணாநிதி. ஆனால் அந்த அறிவிப்பு 2011 இல் ஆட்சிக்கு வந்தவர்களால் பத்துஆண்டு காலம் செயல்படுத்தப்படாமல் கிடந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற பின் 22.11.2021 அன்று கோவைக்கு வருகை தந்தார். அப்போது வ.உசி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி கோவை மாநகருக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியது.
அதன்படி, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல், பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடம், நிலத்தடி நீர்த்தொட்டி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள், தரைத்தள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மொத்தம் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர், பூங்காவில் உள்ள தமிழர் கொடை சிற்ப வனம், கடையேழு வள்ளல்கள் சிலைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, படிப்பகம், திறந்தவெளி அரங்கம் போன்றவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். மேலும், செம்மொழிப் பூங்காவில் மரக்கன்றினை நட்டார்.
அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஓராட்டுக்குப்பை கிராமத்தில் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் பங்களிப்புடன் ரூ.5.67 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள 86 புதிய வீடுகளைஅவர் திறந்து வைத்து, வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார். பின்னர், கோயம்புத்தூரிலுள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடி, பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
செம்மொழிப் பூங்காவின் சிறப்பம்சங்கள்
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள். 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium), குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம், முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் QR குறியீடுகள் மற்றும் Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.