உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான். வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாள்களில் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிச்சியாக கொண்டாடுவார்கள்.


கிறிஸ்துமஸ் பண்டிகை:


தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறும். மெரீனா கடற்கடை, சாந்தோம் பேராலயம், வணிக மால்கள், செயின்ட் தாமஸ் பேராலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் வண்ண விளக்குகளுடன் நட்சத்திரங்கள் மின்ன கொண்டாட்டங்கள் இருக்கும்.  இந்த கிறிஸ்துமஸ் விழாவினை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள்.


அதுமட்டுமின்றி வேளாங்கண்ணியிலும் கிறிஸ்துமஸ் விழா களைக்கட்டும். நூர் நகரம் என்றும் அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் சிகப்பு தொப்பி அணிந்து பலரும் ஊர்வலம் செல்வர். பிரார்த்தனை செய்வார்கள்.இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் இருக்கும். மேலும், பல இடங்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடுவார்கள்.


600 சிறப்பு பேருந்துகள்


இந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை 300 அரசுப் பேருந்துகளும், சனிக்கிழமை 300 அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சிறப்பு ரயில்


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்திலிருந்து இன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.


மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 23 வெள்ளிக்கிமை அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.