தமிழகத்தில் அரசு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு, 8 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வணிகம், சமூக மற்றும் பிற தேவைகளுக்காக மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்போக்குவரத்துக் கழகங்களின் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக இயக்கப்படும் சுமார் 21,527 பேருந்துகளின் மூலம் தினசரி சுமார் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவைகளை இயக்குதல்,

பழைய பேருந்துகளை மாற்றுதல், பணிமனைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களின் தகுதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளின் சேவைகளை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

நவீன வசதிகளோடு போக்குவரத்து துறை

அந்த வகையில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசற்ற, நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலான பொதுப் போக்குவரத்து அமைப்பாக மேம்படுத்த வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண வசூல், GPS /Vehicle Location Tracking, பயணிகள் தகவல் அமைப்புகள், பேருந்து நிலையங்களில் 24x7 பயணிகள் உதவி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்கள்.

அதன்படி, பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை  தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். 

 எந்த எந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்

இப்பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பேருந்துகளும் அடங்கும். இப்புதிய பேருந்துகள் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை வலுப்படுத்தி, பயணிகளுக்கான தொடர் சேவையை மேம்படுத்தி, பயணிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு வகைசெய்யும்.இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களிலிருந்தும், மாநகர் போக்குவரத்து பேருந்துகள் தொடர்புடைய பேருந்து நிலையங்களிலிருந்தும் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.