சென்னையின் அடையாளம் பிராட்வே பேருந்து நிலையம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சிக்கி மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் ஏற்கனவே சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையில் சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதே போல சென்னையின் முக்கிய இடமாக இருப்பது பாரிமுனை, இங்கு தினந்தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கிறார்கள். எனவே அந்த நெரிசல் மிக்க பகுதியான குறளகம் அருகே பிராட்வே பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

75ஆண்டு வரலாற்றை கொண்ட பேருந்து நிலையம்

அதிலும் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மிகவும் நெரிசலான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பேருந்து உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்ட வேண்டும் என சென்னை மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது.  பல கட்ட ஆய்வுகளுக்கு 75 ஆண்டுகால பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து  சென்னையின் நுழைவு வாயிலான 75 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பிராட்வே பேருந்து நிலையம் தனது பணியை கடந்த மாதம் முடித்துக்கொண்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க தீவுத்திடல், ராயபுரம் மேம்பாலம் கீழ்பகுதி இடத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

822 கோடியில் அதிநவீன பேருந்து நிலையம்

தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்துப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  தொடங்கி வைக்கிறார். 

பிராட்வே பேருந்து நிலையம் சிறப்பம்சம் என்ன.?

  •  உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் MRTS / புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட Multi Modal Facility Complex கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. 
  • 73 பேருந்து நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • MMFC திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டட பிரிவுகளைக் கொண்டுள்ளது.

பிரிவு 1 - இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும்.

இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், NSC போஸ் ரோடு, Esplande ரோடு மற்றும் TNPSC ரோடு நுழைவு மற்றும் வெளியேற்று அமைப்பு வழியாக பேருந்து நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்துள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பேருந்து நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பின்படி பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 

இரண்டாவது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அடுக்கு கார் நிறுத்தும் அமைப்பு உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 73 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இரண்டாவது முதல் எட்டாவது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரிவு 2 - 22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டடம்

2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை MMFC கட்டடத்தின் பயணிகள் கூடத்திற்கும். கார் நிறுத்துமிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது அடித்தளத்தில்-இரண்டு அடுக்கு கார் நிறுத்துமிட வசதியும், தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை சில்லறை வணிக தளங்களாகவும் திட்டமிடப்பட்டுள்ளது, மூன்றாம் தளம் முதல் ஒன்பதாம் தளம் வரை அலுவலகப் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரிவு 3 

ஒரு அடித்தளம் மற்றும் ஒரு தரைத் தளத்தை கொண்ட துணை போக்குவரத்து நுழைவு கட்டடமும் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாகும். இது மெட்ரோ செயல்பாட்டு கட்டமைப்புகளை குறிப்பாக நுழைவு /வெளியேறும் கட்டமைப்புகளை உள்ளடக்கியது. இது பேருந்து முனையத்தின் இணைப்பு மண்டலத்தை NSC போஸ் சாலையில் அமைந்துள்ள பயணிகள் இணைப்பு மண்டலத்தை NSC போஸ் சாலையில் அமைந்துள்ள பயணிகள் கூடத்துடன் இணைக்கிறது.

இந்த MMFC திட்டத்தில் 433 நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் 1,174 இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் போன்ற வசதிகளுடன், மின்சாரம், காற்றோட்டம், குளிர்சாதன வசதி, தீயணைப்பு அமைப்புகள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்மாற்றி, ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு (IBMS), நவீன கழிப்பறைகள் மற்றும் வெளிப்புற நடை மேம்பாலங்கள் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும்.

பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தோடு அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டப்பட்டவுள்ளார். 2028ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிராட்வே பேருந்து நிலையம் அதி நவீன வசதிகளோடு கொண்டுவரப்படவுள்ளது.