வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளையசக்தி அறிவாற்றலைப் பெற்றிருக்கிறது  என்று எம்ஐடி கல்வி நிலையத்தின் நிறுவனர்களைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். 


செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழா உரையாற்றினார். அவர் பேசியதாவது:


''கல்வியில்‌ சிறந்த தமிழ்நாடு என்று பெயரெடுத்த மாநிலம்‌ தமிழ்நாடு!


இந்தியாவின்‌ புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின்‌ பட்டியலை எடுத்துப்‌ பார்த்தால்‌, அது எந்தப்‌ பாடமாக இருந்தாலும்‌, முன்னணி நிறுவனங்களின்‌ பட்டியலில்‌, தமிழ்நாட்டின்‌ கல்வி நிறுவனங்கள்‌ நிச்சயமாக இடம்‌ பெறும்‌. அப்படி இடம்பெறும்‌ நிறுவனங்களில்‌ ஒன்றுதான்‌ இந்த எம்‌.ஐ.டி. இந்த எம்‌.ஐ.டிக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே கிடைத்திருக்கக்கூடிய பெருமை‌.


மாணவர்களின்‌ வழிகாட்டியாகவும்‌, இளைஞர்களின்‌ நம்பிக்கை நட்சத்திரமாகவும்‌ விளங்கிய முன்னாள்‌ குடியரசுத்‌ தலைவர்‌ ஏவுகணை மனிதர்‌ என்று போற்றப்படும்‌ ஏ.பி.ஜே.அப்துல் கலாம்‌‌ படித்த கல்லூரி என்பதை விட, உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை.


தொழில்‌ அதிபரும்‌, கொடையுள்ளத்தில்‌ சிறந்தவருமான விளங்கிய மரியாதைக்குரிய சி.ராஜம்‌ இந்தியா ஹவுஸ்‌ என்ற தனது சொத்தை விற்று எம்‌.ஐ.டி. என்ற நிறுவனத்தை 1949- ஆம்‌ ஆண்டு நிறுவினார். 1955- ஆம்‌ ஆண்டு முதல்‌ அவரது மகன்‌ சி.ஆர்‌.இராமசாமி இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். இதன்‌ தொடர்ச்சியாக, இன்று அவருடைய பேத்தி டாக்டர்‌ பிரேமா சீனிவாசன்‌  இந்த கல்வி நிறுவனத்தை நடத்திக்‌ கொண்டு வருகிறார்‌. வாரிசுகளால்‌ இந்தக்‌ கல்வி நிறுவனமும்‌ வளர்ந்துள்ளது.‌


வாரிசுகளால் ஏராளமாக தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளார்கள், வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளையசக்தி அறிவாற்றலைப் பெற்றிருக்கிறது.


நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். வாரிசுகள் நினைத்தால், ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைக்கு சேவை ஆற்ற முடியும். இதற்கு எடுத்துக்காட்டுதான் எம்ஐடி நிறுவனத்தை உருவாக்கிய ராஜம் அவர்களின் குடும்பம்.


எம்‌.ஐ.டி வளாகத்தில்‌ பல்வேறு திட்டங்களுக்கும்‌, பல மையங்கள்‌ உருவாக்குவதற்கும்‌ தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து கொண்டு வருகிறது.


* வான்வழி ஆராய்ச்சி மையத்தை இங்கு உருவாக்க அரசு உதவி செய்தது.


* நுண்ணிய துணைக்கோளான 'அனுசாட்‌' வெற்றிகரமாக உருவாக்க உதவி செயயப்பட்டது.
* தானியங்கிப்‌ பொறியியல்‌ என்ற சிறப்புறுமையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு ரூபாய்‌ 50 கோடி ஒதுக்கீடு செய்தது.
* தானியங்கிப்‌ பொறியியல்‌ துறையில்‌ 27/00 சதுர அடியில்‌ 6 ஆய்வுக்‌ கூடங்கள்‌ அடங்கிய கட்டடம்‌ ஒன்று கட்டப்பட்டது.
* சீமன்ஸ்‌ சிறப்புறு மையம்‌ என்ற ஒன்றை தமிழ்நாடு திறன்மிகு வளர்ச்சி கழகத்திடமிருந்து நிதி பெற்று அமைத்துள்ளது.
*  ஆளில்லா வான்வழி வாகனக்‌ கழகத்தை எம்‌.ஐ.டி.யில்‌ நிறுவப்பட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தோடு இணைத்து உருவாக்கியது.
* தமிழ்நாடு அரசால்‌ உருவாக்கப்பட்ட சமூகநலத்‌ திட்டங்கள்‌ அனைத்து பயனையும்‌ எம்‌.ஐ.டி. மாணவர்கள்‌ தொடர்ந்து பெற்று வருகிறார்கள்‌''


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.