விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விக்னேஷ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "விசாரணைக்கைதி விக்னேஷுக்கு வலிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷின் உடல்கூராய்வு நடைபெற்றது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணங்கள் எப்போது நிகழ்ந்தாலும் அது முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நீதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
முன்னதாக, சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்துறையினர் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் 2 நபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28 என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.மேலும், காவல்துறையினர் விக்னேஷின் உடலை அவர்களே புதைக்க முயற்சிப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், விக்னேஷ் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், அண்மையில், புரசைவாக்கம், கெல்லீஸ் அறிவிப்புக்குறி அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை மடக்கியதாகவும், அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து அவர்களை தலைமைச் செயலக குடியுருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த ஏழை இளைஞன் விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.