எதிர்பாராத விதமாக கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (31.1202021)  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 4 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பில் இருப்பதால், கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


நேற்று மதியம் தொடங்கிய கனமழை விடாமல் இரவு முழுவதும் தொடர்ந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதன்காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. எம்.ஆர்.சி நகரில் அதிகனமழையால் 21 செ.மீ மழையும், விமான நிலையம் பகுதியில் 15 செ.மீ அளவுக்கு மழையும் செம்பரம்பாக்கம் பகுதியில் 19 செ.மீ மழையும் பெய்துள்ளது. 


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3000 கன அடியாக உள்ள நிலையில் ஏரியிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 



முன்னதாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்று திரும்பிய உடன் சென்னை  மழை தொடர்பான விஷயங்களை நள்ளிரவில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் சென்னை மாநகராட்சியின் மழை கட்டுப்பாடு இடத்திற்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மழை பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சரிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மழை பாதிப்பு தொடர்பாக  விளக்கினார். 


இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், “'மத்திய சென்னையில் கடுமையான மழை பெய்துள்ளது. நுங்கப்பாக்கம், தி நகர் போன்ற பகுதிகளில் 15 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. சென்னை கடலோர பகுதிகளில் மழை மேகங்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருகிறது. கிழக்கு பக்கத்தில் இருந்து வரும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் மழை மேகங்கள் சென்னை கடற்கரை ஓரங்களிலேயே மழையாக பெய்கிறது. அதனால் கடற்கரை ஓர பகுதிகளில் பயணம் செய்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். சென்னையின் உள்பகுதியில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் எதிர்பாராத மழை பெய்துள்ளது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண