விழுப்புரம்  : முதலமைச்சர்  ஸ்டாலினும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் வரும் 29ம் தேதி ஒரே மேடையில் தோன்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விழுப்புரத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. வரும் 29ல் நடக்கும் அதன் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, சமூக நீதி போராளிகள் குடும்பங்களுக்கும், சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என, அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.


கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 


ஒரே மேடையில் முதலமைச்சர்  ஸ்டாலினும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும்


விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில் முன்னாள் அமைச்சர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் 5877 சதுர அடி பரப்பளவில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 8477 சதுர அடி பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற 29ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார்பில் பத்தாயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார்.


இதையொட்டி, நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''சமூக நீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார் என்றார். தி.மு.க எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க வும், அதன் தலைவர்களும் தி.மு.க., அரசு அழைப்பை ஏற்று, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு செய்தியாளர் சந்திப்பு : தென்னாடு மாவட்டத்தில் திராவிட இயக்கத்தினுடைய தலைவராக இருந்தவர், கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் எ.கோவிந்தசாமி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் வந்தபோது பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அந்த அடிப்படையில் விழுப்புரத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.877 சதுர அடியில் மணிமண்டபம் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 சமூக நீதி போராளிகளுக்கு அவர்களை நினைவு கூறும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் ஐந்து கோடிய 75 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 8.417 சதுர அடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


மணிமண்டபம் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மண்டபமும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை ஆளுங்கட்சியானவுடன் நினைவில் வைத்து நிறைவேற்றி இருக்கிறார் என தெரிவித்தார்.


இட ஒதுக்கீடு போராளிகள்


பாப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய  21 பேரும் போலீஸாரின் அடுக்குமுறைக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையாகினர்.