உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, வரும் 30-10-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பில், மூத்த அமைச்சர்களான மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை பசும்பொன் கிராமத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று (அக்.29) மதுரை சென்று கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தார். அதன் தொடர்ச்சியாக பசும்பொன் நினைவிடம் செல்லும் அவர் அங்குள்ள அவரின் சிலைக்கு மரியாதை செலுத்த இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சரின் முக ஸ்டாலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் பசும்பொன் தேவர் நினைவிடத்திலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கின்றனர். மேலும், தேவர் நினைவிடத்திற்கு அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர உள்ளனர். இதையடுத்து, தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார், 13 ட்ரோன் கேமிரா ஈடுபட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். இவர் தனது வாழ்நாளில் அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வந்தார். கடைசி வரையிலும் பிரமச்சாரி வாழ்க்கையையே வாழ்ந்தார். பசும்பொன்னில், தனது வீட்டில் உள்ள பூஜை அறையி்ல் தினசரி தேவர் நீண்ட நேரம் தியானத்திலும், பூஜையி்ல் ஈடுப்பட்டவர். சிறந்த ஆன்மிகவாதியும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு வருடமும், அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மண்டபம் வளாகத்தில் நடைபெறுகிறது. தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30 ஆகும். எனவே ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது.