மிக்ஜாம் புயல் பேரிடரில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 3429 தூய்மை பணியாளர்களுக்கு தலா 4000 ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ. 1,37,16,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது. இதனால் சென்னையில் இருக்கும் அனேக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் வடபழனி, சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி ராயப்பேட்டை , ஊரப்பாக்கம், துறைமுகம் , எண்ணூர் , வியாசர்பாடி , சைதாபேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. 






ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால அப்பகுதிகளில் மழை நீர் விரைவில் வடிந்தது. ஆனால் பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைநீரை அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் குப்பை கூடமாக காட்சியளித்தது. ஆனால் தூய்மை பணியாளர்கள் மழை, வெள்ளம் என எதையும் பொருட்படுதாமல் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வந்தார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் சாக்கடை, கழிவுநீர் என அனைத்து சூழலிலும் தூய்மை பணி செய்து வந்தனர். 


இதனை தொடர்ந்து இன்று ரிப்பன் மாளிலையில், பேரிடரின் போது சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா , மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரநிதிநிதிகள் பங்கேற்றனர். 3,429 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகையும், சான்றிதழையும் வழங்கினார்.