சேது சமுத்திரத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌ இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்‌.


இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


"தமிழ்நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியையும்‌, இந்திய நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியையும்‌ வலுப்பெறச்‌ செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத்‌ திட்டம்‌ விளங்கி வருகின்றது.


1860-ஆம்‌ ஆண்டு 50 லட்சம்‌ ரூபாயில்‌ கமாண்டர் டெய்லர் என்பவரால்‌ உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம்‌ இது. அதன்பிறகு 1955-ல்‌ தமிழ்நாட்டின்‌ சிறந்த நிபுணர்‌ டாக்டர்‌ ஏ. இராமசாமி முதலியார்‌ குழு, 1963-இல்‌ நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக்‌ கூட்டம்‌, 1964-ல்‌ அமைக்கப்பட்ட டாக்டர்‌ நாகேந்திரசிங்‌ ஐ.சி.எஸ்‌ தலைமையிலான உயர்நிலைக்குழு - ஆகிய பொறியியல்‌ வல்லுநர்களால்‌ பல்வேறு ஆண்டு காலம்‌ ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான்‌ சேது சமுத்திரத்‌ திட்டம் ஆகும்‌. இதன்‌ வழித்தடங்கள்‌ ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல்‌ பாதிக்கப்படாத வகையில்‌ பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.


சேது சமுத்திரத்‌ திட்டத்தின்‌ வழித்தடம்‌


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்‌போது பிரதமராக இருந்த அடல்‌ பிகாரி வாஜ்பாய்‌‌ “Feasibility Study"-க்கு அனுமதியளித்தார்‌. அப்போதுதான்‌ சேதுசமுத்திரத்‌ திட்டத்தின்‌ வழித்தடம்‌ எது என்பதும்‌ இறுதி செய்யப்பட்டது. பின்னர்‌ காங்கிரஸ்‌ தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.


திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக்‌ கூட்டணி அரசின்‌ பிரதமரான டாக்டர்‌ பன்மோகன்சிங்‌கால் 2004-ஆம்‌ ஆண்டு 2,427 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ இத்திட்டம்‌ அனுமதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்‌ கலைஞரும்‌, ஐக்கிய முற்போக்குக்‌ கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும்‌ முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர்‌‌ மன்மோகன்சிங்‌ 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்‌.


திட்டப்‌ பணிகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருந்த நேரத்தில்‌, தமிழ்நாட்டின்‌ பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும்‌ இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென்‌ மாவட்டங்களை செழிக்க வைக்கும்‌ இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின்‌ வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம்‌ அளிக்கும்‌ இந்த சேது சமுத்திரத்‌ திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக்‌ காரணத்தைக்‌ கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும்‌ வகையில்‌ தற்போது "ராமேஸ்வரம்‌ கடற்பகுதியில்‌ இருந்தது எந்த மாதிரி கட்டுமானம்‌ என்பதை கூறுவது கடினம்‌” என்று ஒன்றிய அமைச்சர்‌ நாடாளுமன்றத்தில்‌ சொல்லி இருக்கிறார்‌.


வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை


இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில்‌, சேது சமுத்திரத்திட்டத்தை இனியும்‌ நிறைவேற்றாமல்‌ இருப்பது தமிழ்நாட்டின்‌ முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்‌ நிகழ்வாகவே கருதி இந்த மன்றம்‌ கவலை தெரிவிக்கிறது.


இனியும்‌ இந்தத்‌ திட்டத்தை செயல்படுத்தவிடாமல்‌ சில சக்திகள்‌ முயல்வது நாட்டின்‌ வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம்‌ கருதுகிறது. எனவே, மேலும்‌ தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத்‌ திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும்‌ என்றும்‌, இத்திட்டத்தைச்‌ செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும்‌ நல்கும்‌ என்றும்‌ இந்த மாமன்றம்‌ தீர்மானிக்கிறது.


திட்டத்தின் பலன்கள் என்ன?


இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்; சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும்.


மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும்.  இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்."


இவ்வாறு சேது சமுத்திரத் திட்டத்துக்கான தனித் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.