வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டத்தை அயலக தமிழக தினம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .
ஜனவரி 12ஆம் தேதி அயலக தமிழக தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழை தமிழே என அழைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் உள்ள பிற நாடுகளோடு நல்லுரவு கொண்ட வரலாறு தமிழகத்திற்கு உள்ளது. வரலாற்று பெருமைமிக்க ஏதன்ஸ், ரோம் போன்று தமிழகத்தில் தொண்டி, பூம்புகார் உள்ளது.
பூம்புகாரில் சோழர் காலத்தில் துறைமுகம் மூலம் பல நாடுகளுடன் வர்த்தகம் நடத்தியதை பட்டினப்பாலை படம் சுட்டிக்காட்டியது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து துறையிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றனர். வேறு நாடுகளுக்கு சென்றாலும் தமிழை நெஞ்சில் வைத்து காப்பவர்கள் தமிழர்கள், அயல் நாடுகளில் தமிழ் விதையை வித்திட்டு வளர்த்தவர்கள் தமிழர்கள்.
திராவிட மாடல் அரசு அயல் நாட்டு தமிழர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கியது. ஜனவரி 12ஆம் நாள் அயலக தமிழக தினம் கொண்டாடப்படும் என அறிவித்த நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழை எளிமையாக கற்று கொள்ள தமிழ் பாட நூல்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களை தமிழகம் அழைத்து வருவது மற்றும் இக்கட்டான சூழலில் உதவிபுரியும் வகையில் இந்திய தூதரகம் மற்றும் தமிழ் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது 80,000 மக்கள் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு சிறு குரு தொழி மூலம் கடன் வழங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் வெளி நாட்டு வாழ் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நான்கு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
- புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரவுகள் தயார் செய்யப்படும்.
- வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் குடும்பங்களில் இருந்து ஆண்டுக்கு 200 மாணவர்கள் தமிழ்நாடு பயன்பாடு சுற்றுலா அழைத்து வர நடவடிக்கை.
- வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம்.
- அயல்நாடு செல்பவர்கள் குறித்து தரவுத்தளம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டார்.