Crop Damage Cm stalin Relief : டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை அமைச்சர்கள் குழு நேற்று பார்வையிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் மழைநீரில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 1600 ஏக்கர் உளுந்து, 1200 ஏக்கர் நிலக்கடலை மழைநீரால் சூழப்பட்டதாக வேளாண் துறையினர் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதேபோல் திருவாரூரில் நெற்பயிர்கள் 27 ஆயிரம் ஏக்கர், உளுந்து 18 ஆயிரம் ஏக்கர், 2,170 ஏக்கர் கடலை சேதமடைந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நாகையில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், மயிலாடுதுறையில் 35 ஆயிரம் ஏக்கர் நெர்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து மழையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பயிர்களுக்கான ஈரப்பத அளவை 22% வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேளாண் துறை செயலாளர், மூத்த அதிகாரிகள் குழு நேற்று பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், “கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.
நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.