சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது கூறினார்.
மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் வரும்போது தான் பிரச்னை வருகிறது. அரசைப் பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம், அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்பது தான் கொள்கை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், எவையெல்லாம் தேவையற்றவையோ அவற்றையெல்லாம் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம்” என கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.