Chickenpox ; குழந்தைகளை காக்க தடுப்பூசி அவசியம் !! எச்சரிக்கை கொடுக்கும் மருத்துவர்கள்
சின்னம்மை நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சின்னம்மை பரவல்
சின்னம்மை நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது. பாதிக்கப்பட்டவர் இருமும் போது தும்மும்போது வெளி வரும், காற்று துளிகள் வாயிலாகவும், கொப்பளங்களில் இருந்து வரும் திரவத்தை தொடுவதாலும், அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் சின்னம்மை பரவுகிறது.
தீவிர பாதிப்பு இந்த நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் துவங்கும். பின், உடலில் சிறிய நீர் திவலைகள் போன்ற கொப்பளங்கள் தோன்றி, உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து, பின் உடைந்து காய்ந்து விடும்.
சின்னம்மையானது பெரியவர்களுக்கு, சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் ஆகியோருக்கு, தீவிர பாதிப்பு ஏற்படலாம். எனவே, குழந்தைகளுக்கு அந்நோய் வராமல் இருக்க தனியார் மருத்துவமனைகளில், சின்னம்மை தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது ;
பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகளவில், சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் தேசிய தடுப்பூசி திட்டத்தில் சின்னம்மை தடுப்பூசி கிடையாது.
இவை, உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்பதால், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதில்லை. அதே நேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் பாதிக்கப்படும் போது நோய் பாதிப்பு தீவிரமாக இருக்கலாம். அவ்வாறான குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
பாதிக்கப்படும் குழந்தைகளின் அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை, 10 நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தில் சின்னம்மை நோய் பாதிப்பு மட்டுமே இருக்கிறது. தட்டம்மை போன்ற பாதிப்புகள் இல்லை என இவ்வாறு அவர் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















