Napier Bridge to Kovalam Water Metro: சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசு குறைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்காக சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal)
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நீர்வழி போக்குவரத்து ஆக ஒரு காலகட்டத்தில் இருந்து வந்தது. இந்த கால்வாயானது, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகள் வழியாக செல்கிறது. இதன் நீளமானது, 796 கிலோமீட்டராக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 163 கிலோமீட்டர் நீளம் செல்கிறது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வரை செல்கிறது. பக்கிங்காம். கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளாலும் கழிவு நீர் வெளியேற்றத்தாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்த பக்கிங்காம் கால்வாயில், ஆரணி ஆறு, அடையாறு, பாலாறு போன்ற ஆறுகளுக்கு வடிகால்வாயாகும் இது இருந்து வந்துள்ளது. இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் போக்குவரத்தும் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் மீண்டும் சென்னை நகரில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய போக்குவரத்து ஆணையமான CUMTA பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோவை இயக்க திட்டமிட்டு வருகிறது.
சென்னை வாட்டர் மெட்ரோ திட்டம் - Chennai Water Metro
முதற்கட்டமாக இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சென்னை நேப்பியர் பாலம் பகுதியில் இருந்து கோவளம் முட்டுக்காடு வரை போக்குவரத்தை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி சுமார் 53 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும். குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், சுற்றுச்சூழல் மாசும் குறையும் என தெரிவித்து.
திட்டத்தின் மதிப்பீடு என்ன ?
இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலந்திருப்பதால் அவற்றை சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு 3000 கோடி ரூபாய் முதல் 5000 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை - Detailed Project Report
அதாவது இந்த திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே உள்ள முட்டுக்காடு பகுதி வரை 53 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மெரினா கடற்கரை, சென்னை சென்ட்ரல் ஆகியவையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல் கட்டமாக இந்த திட்டம் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி சாத்தியக்கூறு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை சாத்தியக்கூறு குறித்து விரிவான திட்ட அறிக்கையை ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.