Chennai Water Metro: சென்னை சென்ட்ரல் முதல் மாமல்லபுரம் வரை: பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ! 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய பயணம்?
Chennai Water Metro: "சென்னை சென்ட்ரல் முதல் மாமல்லபுரம் வரை பக்கிங்காம் கால்வாயில், வாட்டர் மெட்ரோ கொண்டு வர சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது"

சென்னை நகரின் வருங்கால போக்குவரத்து திட்டமாக பக்கிங்காம் கால்வாயில் அரை நூற்றாண்டிற்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் இயக்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal)
பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களை இணைக்கும் நீர்வழி ஆகும். இந்த கால்வாயானது, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகள் வழியாக செல்கிறது. இதன் நீளமானது, 796 கிலோமீட்டராக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 163 கிலோமீட்டர் நீளம் செல்கிறது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வரை செல்கிறது. மதராசாக இருந்த சென்னை நகரில் ஏற்பட்ட தாது வருஷ பஞ்சத்தில் இருந்து, மக்களை காக்கும் பொருட்டு கவர்னர் பக்கிங்காம் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வரை கால்வாய் வெட்ட உத்தரவிட்டார்.
கால்வாய் வெட்டி, கஞ்சி தொட்டி அமைத்து நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கியதோடு மக்களின் பஞ்ச பசியை போக்கினார் பக்கிங்காம். அவரது பெயரில் இருக்கும் இந்த கால்வாய் தற்போது ஆக்கிரமிப்புகளாலும் கழிவு நீர் வெளியேற்றத்தாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
50 ஆண்டுகால நீர் போக்குவரத்து
இந்த பக்கிங்காம் கால்வாயில், ஆரணி ஆறு, அடையாறு, பாலாறு போன்ற ஆறுகளுக்கு வடிகால்வாயாகவும் இது இருந்து வந்துள்ளது. இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீர் போக்குவரத்தும் இருந்து வந்துள்ளது.
1960-ஆம் ஆண்டு வரை இந்த கால்வாயில் படகு போக்குவரத்து, இருந்து வந்துள்ளது. ஆந்திராவில் இருந்து அரிசி, மிளகு, பஞ்சு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை படகு மூலமாக கொண்டு வந்துள்ளனர். 1.47 லட்சம் டன் அளவிற்கான வணிகம் நடைபெற்று இருப்பதாகவும் சில குறிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் தான் சென்னை நகரில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய போக்குவரத்து ஆணையமான CUMTA பக்கிங்ஹாம் கால்வாயில் வாட்டர் மெட்ரோவை இயக்க திட்டமிட்டு வருகிறது.
வாட்டர் மெட்ரோ திட்டம் - Chennai Water Metro
முதல் கட்டமாக சென்னை சென்ட்ரலில் இருந்து முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை வாட்டர் மெட்ரோ திட்டத்தை கேரள மாநிலம் கொச்சியில் போன்று இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய நீர்வள ஆணையத்திடம் முறையிட்டுள்ளதோடு பக்கிங்ஹாம் கால்வாயை முறைப்படி தூர்வாரி தூய்மைப்படுத்துவதற்கான திட்ட வரைவையும் சமர்ப்பிக்க உள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து மாமல்லபுரம் வரை 40 கழிவுநீர் மறுசுழற்சி நிலையங்கள் அமைத்து, அதன் மூலம் பக்கிங்காம் கால்வாயில் வெளியேறும் கழிவு நீரை மட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கொச்சி நகரில் இயக்கப்படும் வாட்டர் மெட்ரோ போல, சென்னையிலும் செயல்படுத்த வேண்டும் என்றால் பக்கிங்ஹாம் கால்வாயை இரண்டு மீட்டர் வரை தூர்வாரி பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தனி ஒரு அமைப்பையே ஏற்படுத்தவும் அரசு முடிவு எடுத்துள்ளது.
பணிகள் தொடங்கப்படுவது எப்போது ?
பக்கிங்காம் கால்வாய் பராமரிக்கப்பட்டால் சென்னை நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உப்பு தன்மையில் இருந்து பாதுகாக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரண்டு மீட்டருக்கு மேல் சமமாக பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படும்போது, வெள்ள காலங்களில் மழைநீர் வடியும் ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது நீர்வழி திட்டம் என்பதால் மத்திய அரசின் முழு ஒப்புதல் அவசியம் என்கிற காரணத்தினால் தேசிய நீர்வள ஆணையத்தின் ஆலோசனைப்படி இன்னும் ஐந்து வருடங்களுக்குள் இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.





















