வார விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்று, பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Continues below advertisement

சொந்த ஊர் திரும்பிய மக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வார விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவடைவதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் பொதுமக்கள் மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடி, மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் வழியாகவே கடந்து செல்ல வேண்டும் என்பதால், இந்த முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Continues below advertisement

மேம்பாலப் பணிகளால் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை

பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் படாளம், புக்கத்துறை, கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.

குறிப்பாக, படாளம் மற்றும் புக்கத்துறை ஆகிய பகுதிகளில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலைப் பணிகளின் காரணமாகச் சாலைகள் குறுகலாக மாறியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைந்துள்ளது.

உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த வாகனங்கள் அனைத்தும், இந்தத் திடீர் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன. நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த பொதுமக்கள், இந்த முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் தங்களின் இலக்குகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் படும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். நள்ளிரவையும் தாண்டி இந்த நெரிசல் நீடிக்கும் என்பதால், போக்குவரத்தைச் சீரமைக்கக் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.