Chennai-Tada NH: கவலை வேண்டாம்..! சென்னை டூ தடா ரூட் ரெடி, திருப்பதி பயணம் ரொம்ப ஈசி - தயாரான 6 வழிச்சாலை
Chennai-Tada NH Road: தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை அதிவேகமாக இணைக்கும், சென்னை - தடா 6 வழிச்சாலை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Chennai-Tada NH Road: சென்னை - தடா 6 வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், திருப்பதி பயணம் மிக எளிதாகும் என நம்பப்படுகிறது.
சென்னை - தடா 6 வழிச்சாலை:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்க, தேசிய நெடுஞ்சலைகள் ஆணையம் சாலை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் தான், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதானதாகவும், வேகமானதாகவும் மாற்றும் நோக்கில் சென்னை - தடா இடையேயான நெடுஞ்சாலையை, 6 வழிப்பாதையாக விரிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் இந்த சாலை முழுமையாக பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ஆந்திரா செல்வோருக்கும், குறிப்பாக திருப்பதி, நெல்லூர் போன்ற பகுதிகளுக்கும் செல்வோருக்கான, பயணம் நேரம் வெகுவாக குறையும்.
திட்டத்தின் முக்கிய பணிகள்:
- இந்தத் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை 11.00 கி.மீ முதல் 54.40 கி.மீ வரை அகலப்படுத்தும் பணி அடங்கும்
- இந்தத் திட்டத்தை எல்&டி சென்னை-தடா டோல்வே பிரைவேட் லிமிடெட் (எல்&டி-சிடிடிபிஎல்) செயல்படுத்துகிறது
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நெடுஞ்சாலையின் 10.4 கி.மீ நீளத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சுங்கக் கட்டணம் குறையும் வாய்ப்புள்ளது. வாகன நெரிசல் காரணமாக, சுங்கச்சாவடி வலையமைப்பிலிருந்து நீக்க முன்மொழியப்பட்ட மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையின் முதல் பகுதி இதுவாகும்.
- இருப்பினும், குறிப்பிட்ட தூரம் வரையிலான சாலையை மாநில அரசிடம் ஒப்படைப்பதற்கு முன்பு NHAI அதனை சீரமைக்கும்
15 ஆண்டுகளாக நடைபெறும் பணிகள்:
சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலை, சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த நெடுஞ்சாலை, 54 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. இதனை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் 2009-ல் தொடங்கப்பட்டது. மேலும் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்புக்காக 330 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடர்ந்து மந்தகத்தியில் நடைபெற்று வருவதால், 16 ஆண்டுகளாகியும் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலவரப்படி, திட்டத்தின் 95.75 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. இன்னும் 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது.
துரித கதியில் இறுதிகட்ட பணிகள்:
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) தரவுகளின்படி, இலகுரக வாகன அண்டர்பாஸ் (LVUP) மற்றும் ஒரு பாதசாரி சுரங்கப்பாதை ஆகியவற்றின் கட்டுமானங்களை இன்னும் முடிக்கவில்லை. அந்த கட்டமைப்புகளின் கட்டுமானச் செலவு 295.97 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, ஜனவரி 2025-க்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும். LVUP இல் இரண்டு பாதைகளும் முடிக்கப்பட வேண்டும் மற்றும் வண்டிப்பாதையின் அகலத்திற்கு ஏற்றவாறு சாலையை அகலப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், 16 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும், சென்னை - தடா 6 வழிச்சாலையானது வெகு விரைவில் முற்றிலுமாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
கூடுதல் நிதி கோரும் ஒப்பந்ததாரர்:
இதனிடையே கட்டுமான பணிகளுக்கான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாகவும், எனவே குறிப்பிடப்பட்ட தொகையில் கட்டுமானத்தை முடிக்க முடியவில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதற்காக பண ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் மேலும், பழைய தொகையை குறைத்த பிறகு கட்டணத்தில் உள்ள வித்தியாசத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தாமதத்திற்கான காரணங்கள்:
- பல சந்திப்புகள் மற்றும் இருபுறமும் உள்ளூர் வாகனங்கள் நுழைவதால், உச்ச நேரங்களில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிகளை துரிதப்படுத்த முடியவில்லை
- பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் வடிகால் அமைப்பு தடைபட்டுள்ளது.
- வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும், புழலுக்கு அருகிலுள்ள காவங்கரை மீன் சந்தைக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை வண்டிப்பாதையில் நிறுத்துகிறார்கள்
இதுபோன்ற காரணங்களால் திட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.