Chennai Sangamam: சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஒத்திகை: கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி
சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ள கிராமியக் கலைஞர்களுடன் கனிமொழி கருணாநிதி உரையாடினார்.
திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’ (Chennai Sangamam) என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவை சென்னையில் ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2022-ல் இருந்து சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
அதில் அவர் சொல்லியிருப்பதாவது: ”தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றொரு முன்னெடுப்புதான் சென்னை சங்கமம். தமிழ் பண்பாட்டுச் சுடரை ஏற்றி வைத்தவர் தமிழினத் தலைவர் கருணாநிதி. அவர் ஏற்றி வைத்த இந்த தமிழ் பண்பாட்டுச் சுடர்தான் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா. 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்டட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்கள் பங்குபெறும் சென்னை சங்கமம்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் பல இடங்ளில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை அரசு சார்பில் நடைபெற இருக்கிறது. வெள்ளிக் கிழமையன்று சென்னை தீவுத் திடலில் நம்ம ஊரு திருவிழா தொடங்க உள்ளது. பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா, உணவுத் திருவிழா என அனைத்தும் இடம்பெறுகின்றன. உலகமே வியந்து பார்க்கும் ’நம்ம ஊரு திருவிழா’வுக்கு அனைவரும் வாருங்கள்...சந்திப்போம்’’ என முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி 13) சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார்.
நாளை மேடையேறி கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ள கலைக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி அவர்கள் கலைஞர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






















