சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  


கடந்த 24 மணிநேரத்தில் கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  நாகை மாவட்டம் பூதங்குடி, அம்பல், பொறக்குடி, நடுக்கடை, ஏனங்குடி, கயத்தார், தெத்தி, வடகுடி, புத்தகரத்தில் கனமழை பெய்து வருகிறது.


மேலும் நாகூர், சிக்கல், புத்தூர், திட்டசேரி, திருமருகல், பொரவாச்சேரி, மஞ்சக்கொள்ளை, திருவாரூர், அடியக்கமங்கலம், மாவூர், மாங்குடி, அம்மையப்பன், கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தா நல்லூர், வடுவூர், வடபாதிமிங்கலம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.


திருத்துறைப்பூண்டி, நன்னிலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலையில் இருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் மரக்கானம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.


இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் சாலையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் ஓடி வருகிறது. 


ஓ.எம்.ஆர்., புரசைவாக்கம், தொண்டியார்பேட்டை, அயனாவரம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர்,  பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் காலையில் லேசான மழை பெய்தது.


பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, கரங்கரை விளக்கம், எழும்பூர், கொளத்தூர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. 


மேற்கு வங்கக்கடல் ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் ஒரு வழிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு நோக்கி அந்த வழிமண்டலை சுழற்சி நகர்கிறது.


இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் நாளை மார்ச் 12 ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


கனமழை எச்சரிக்கை:


கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.


விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


வெப்பநிலை:


வெப்பநிலையை பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது.


13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழகத்தின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், மேற்கு கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.


மார்ச் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், மேற்கு கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.