சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக நிர்வாகி தீக்குளித்தார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 


சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ நகரில் 255 வீடுகள் உள்ளன. இவற்றில் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர் நிலை கால்வாய் பகுதியில் இருப்பதாக புகார் எழுந்தது.


இதனால் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் உள்ள குடியிருப்புகளை அரசு அகற்றி வருகிறது. அரசு நிலத்தில் குடியிருப்புகள் இருப்பதாகவும் அதனால் அகற்றப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாதென கண்டனம் தெரிவித்து 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பில் ஈடுபட்டார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


முன்னதாக, கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் அரசு வாகனங்கள், வீட்டை அப்புறப்படுத்திய புல்டோசர்களை அடித்து நொறுக்கினர். இந்த பிரச்னையால் தற்போது வீடுகளை அப்புறப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட கண்ணையனுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.