கனமழையின் காரணமாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சென்னை, ஆதம்பாக்கம், புது காலனி மெயின் என்ற முகவரியில் இயங்கி வந்த ஆதம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில், கனமழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் தற்காலிகமாக S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையம், ஆதம்பாக்கம், புது காலனி 2 வது தெரு, பழைய எண் - 39, புதிய எண்-12 என்ற முகவரியில் உள்ள வீட்டின் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு S-8 காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, ஆய்வாளர் கைப்பேசி எண் 94449-70835 மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய கைப்பேசி எண் நம்பர்-94981-00161 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். 11-ந் தேதி( நாளை மறுநாள்) கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை 11-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற நீர்த் தேக்கங்களில் இருந்து உரிய நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் படிப்படியாக நீர் திறந்து விடப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் தமிழக கடலோரம் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்