Chennai Metro Rail: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கவுள்ளன.


சென்னை மெட்ரோ ரயில்:


சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது.


இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.  மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்: 


இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களையும் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 


இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  இந்தநிலையில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. அதோடு, ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் இருக்கும் வசதிகள் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.


சிறப்பம்சங்கள் என்னென்ன?


அதன்படி, 1000 பயணிகள் வரை பயணிக்கு திறன் கொண்ட மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில்கள்  உட்புறத்தில் விசாலமான இடங்களை வழங்குவதன் மூலம் தடையற்ற உள்நகர்வுகளை அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன.


குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்தேய இடங்களுடன் சிறப்பு வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு கைப்பிடிகளும், பெண்களின் பகுதியை வேறுபடுத்த  கைப்பிடிகளில் வெவ்வேறு வண்ணங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன.


அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள், ரயில்களில் ஆற்றல் திறனுக்காக மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயணிகள் சரியான இடத்தில் இறங்குவதற்கு ஏதுவாக, எல்சிடி திரைகளில் வரைபடங்களுடன் வழிக்காட்டுதல்கள் பொருத்தப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக, இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் என்று மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க