Porur to Vadapalani metro: போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில்.! எங்கெல்லாம் நிற்கும்- சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு
Porur to Vadapalani metro: போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படவுள்ள நிலையில், எந்த எந்த ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பல மணி நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலையானது நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை விமான நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவையில் அடுத்த கட்டமாக வடபழனி முதல் போரூர் வரையிலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வடபழனி முதல் போரூர் வரை மெட்ரோ ரயில்
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் கட்டம் 2-ல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை ஆய்வு நடைபெற்றது. பெங்களூரு CMRS வட்டத்தைச் சேர்ந்த மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி மற்றும் அவருடைய குழுவினர், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தில் (மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் உட்பட) மொத்தம் இரண்டு நாட்களுக்கு ஆய்வினை மேற்கொண்டனர்.
இரண்டாம் நாள் ஆய்வின் தொடக்கமாக, இரண்டாம் கட்டத் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் கட்டம் 2-ல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை 8.50 கி.மீ. நீளத்திற்கு இன்று (12.02.2026) தங்களது ஆய்வினை மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில் மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோ இரயில் இறுதி வேக சோதனை ஆய்வு பிப்ரவரி. 2026 மூன்றாவது வார இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான பகுதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், பயணிகளுக்கு முதல் கட்ட மெட்ரோ வழித்தடங்களுக்கு நேரடி அணுகல் கிடைக்காது என்பதாலும், பயணிகளின் எண்ணிக்கை போதுமான அளவு அதிகமாக இருக்காது என்றும், இந்த புதிய வழித்தடம் பயணிகளுக்கு முழுமையாகப் பயனளிக்காது என்றும் கருதப்பட்டது.
எந்த மெட்ரா ரயில் நிலையத்திலும் நிற்காது
எனவே இதனைக் கருத்தில் கொண்டு. அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகளை பெறுவதற்குத் தேவைப்படும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும், பயணிகளின் நலனுக்காக, வழித்தடம் 4-ல் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைக்கு முன்னுரிமை அளித்து, இடைப்பட்ட நிறுத்தங்கள் ஏதுமின்றி, போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு தற்காலிக ஏற்பாடாக, பயணிகளின் வசதிக்காக போரூர் சந்திப்பு மெட்ரோ முதல் வடபழனி மெட்ரோ வரை இடையில் உள்ள எந்த நிலையங்களிலும் நிற்காமல் (Non-stop) மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























