தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையாது என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
“புயல் உருவாக வாய்ப்பில்லை“
கடந்த 16-ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று நேற்று காலை உருவாகி, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உட்பட அநேக இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. புயல் உருவாகுமா என்பது குறித்தும் இன்றே தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்றே தெரிவித்திருந்துது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பு இல்லை என்றும், அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை(23.10.25) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நாளை மறுநாள்(24.10.25) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 26, 27, 28 தேதிகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.