வெட்டி விட்டு தப்பி ஓடிய நபர்

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 25) இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் விச்சூர் சாலையில் பைக்கில் வந்துள்ளார்.

Continues below advertisement

அந்த சமயத்தில் எதிர்புறமாக நடந்து வந்த ஒரு வாலிபர் திடீரென்று தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயகுமாரின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். விஜயகுமார் பைக்கில் இருந்து விழுந்து துடித்த போதும் அவரது தலையில் சரமாரியாக வெட்டி விட்டு ஓடி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

கஞ்சா விற்பனையில் முன்விரோதம்

இது பற்றி தகவல் கிடைத்ததும் மணலி புதுநகர் போலீசார் விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரவுடி விஜயகுமார், அவரது அண்ணன் அஜித்குமார் என்கிற கருப்பு அஜித்குமார் ( வயது 28 ) ஆகியோர் பிரபல ரவுடிகள்.

Continues below advertisement

ஓராண்டு முன்பு விச்சூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு உடற்பயிற்சி மையத்தில், கஞ்சா வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அஜித்குமார், விஜயகுமார் ஆகியோர் முக்கிய நபர்களாக கருதப்பட்டனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜித்குமார், விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்தனர். கண்ணம்பாளையத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பழிக்குப் பழியாக அஜித்குமார், விஜயகுமார் ஆகியோரை கொலை செய்ய நண்பர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

வெட்டுவதற்காக காத்திருந்த ரவுடி

இது குறித்து சக ரவுடிகள் மூலம் தெரிந்து கொண்ட அஜித்குமார், விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து தங்கியிருந்துள்ளனர். விச்சூரில் அடுத்த சில நாட்களில் திருவிழா நடைபெற உள்ளது.

இவரது மூத்த அண்ணன் ஜெய் என்பவரின் மகளுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிறந்தநாள். இதனால் விச்சூர் பகுதியை ஒரு முறை பார்த்து விட்டு, தன்னுடைய மூத்த அண்ணன் மகளையும் வாழ்த்தி விட்டு வரலாம் என நினைத்து விஜயகுமார் வந்துள்ளார்.

அனைவரையும் பார்த்து விட்டு பைக்கில் செல்லும் போது கண்ணம்பாளையத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர் ஒருவர் விச்சூரில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்துள்ளார்.

அப்போது விஜயகுமார் மூத்த அண்ணன் ஜெய் என்பவரின் வீட்டிற்கு வந்திருப்பது தெரிந்ததும் உடனடியாக அந்த வாலிபர் அரிவாளை எடுத்துக் கொண்டு விஜயகுமாரின் வீட்டுக்கு அருகாமையில் சாலை ஓரம் காத்திருந்துள்ளார். அப்போது விஜயகுமார் வந்ததும் வெட்டி விட்டு தப்பி விட்டார் என தெரிய வந்துள்ளது. தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.