அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் தற்போதைய மின்சாரம் மற்றும் நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவி வகித்து வருகிறார். கடந்த 2006-2011 ஆம் ஆண்டில் இருந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.76,40,443 சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீதும் வழக்கு தொடரப்பட்டது. 


கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அதேசமயம் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “அரசியல் காரணங்களுக்காக அதிமுக ஆட்சியில் அவதூறு வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆகவே, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும், மனைவி மணிமேகலையையும் விடுவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணை செய்யப்பட்டது. 


அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலையை  விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இப்படியான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையிலான சட்டத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது.  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில் தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை இருவரும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 


மேலும், ‘யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர்.தீர்ப்பை படித்து விட்டு என்னால் 3 நாட்களாக தூங்க முடியவில்லை. நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல’ என கடுமையான கருத்தையும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுழற்சி முறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்னால் நேற்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது மேல்முறையீடு தொடர்பாக விவரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய நீதிபதி ஜெயசந்திரன், ‘இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் தங்கம் தென்னரசு தரப்பு வழக்கின் வாதங்களை தொடங்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.