வலு குறைந்த டிட்வா புயல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. டிட்வா புயல் இலங்கையை புரட்டிபோட்ட நிலையில், தமிழகத்தில் தென், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழையானது பெய்யவில்லை. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையில்லாமல் அவ்வப்போது வெயில் தான் அடித்தது. இந்த நிலையில் டிட்வா புயல் மழை மேகங்களை உருவாக்க முடியாமல் திணறியதாகவும், சென்னையை நெருங்கும் போது மழை மேகங்களை உருவாக்க கூடும் என வானிலையாளர்கள் தெரிவித்திருந்த்தனர்.
சென்னைக்கு அருகே டிட்வா புயல்
இதற்கு ஏற்றார் போல இன்று அதிகாலை முதல் சென்னையில் மழையானது பெய்து வருகிறது. காலையில் அலுவலகங்கள் செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மழை தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் "டிட்வா" தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக் கடற்கரையில் இருந்து சுமார் 70 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கில் நிலைத்திருக்கிறது. இது சென்னைக் கடற்கரைக்கு அருகே தொடர்ந்து நிலை கொண்டு அடுத்த ஒரிரு நாட்களில் படிப்படியாக முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கிலிருந்து வரும் ஒரு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலை டிட்வாவின் புயலுடன் மோதி, ஈரப்பதத்தை வடக்கிலிருந்து அளித்து, அமைப்பின் வடபகுதியில் புதிய மேகக்கூட்டங்களை உருவாக்கி வருகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக் கடற்கரைக்கு மேலும் நெருக்கமாக வரும்போது, இந்த வடக்கு பக்க மேகத்துண்டுகள் மேற்கு திசையை நோக்கி இழுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை அடுத்த சில மணி நேரங்களில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். நம்பிக்கை அளிக்கும் வகையில், அமைப்பின் மையப்பகுதியில் புதிதாக உருவாகும் ஆழமான மேகக்கூட்டங்கள் தொடர்ந்து உருவாகி வருவதால், இன்று வடக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்றுடன் இன்று கனமழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் மற்றும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். அதேசமயம், காவிரி டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் மழை வானிலை குறிப்பாகக் குறையும். இருப்பினும், மேற்கத்திய காற்றினால் மாலை/இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.காவிரி டெல்டா & தென் மாவட்ட விவசாயிகள் வயல்வெளிகளில் தண்ணீரை வடியவைத்து வேளாண் பணிகளை தொடங்க முயற்சிக்கலாம், அடுத்த பரவலான மழை வாய்ப்பு டிசம் 4,5 தேதிகளில் எதிர்ப்பார்க்கலாம்.
தற்போதைய வானிலை அமைப்பு கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், கடல் சீற்றம் கடுமையாகவே இருக்கும், கரையோரப் பகுதிகளில் பலத்த சீற்றக் காற்று வீசும்.மீனவர்களும் பொதுமக்களும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்கோ செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.