சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம், சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் ஜகாா்த்தா நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது.
மருத்துவ அவசர நிலை
விமானம் இந்திய வான்வெளியில், குறிப்பாக சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானி உடனடியாகச் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு, 'மருத்துவ அவசர நிலை' (Medical Emergency) காரணமாக விமானத்தைச் சென்னையில் அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.
அவசரமாக தரையிறங்கிய விமானம்
இதனை ஏற்றுக்கொண்ட சென்னை விமான நிலைய அதிகாரிகள், விமானம் தரையிறங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். விமான நிலையத்தின் பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
விமானம் பத்திரமாகச் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக விமானத்துக்குள் விரைந்த மருத்துவக் குழுவினர், மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் பயணியைச் சோதித்தனர்.
இருக்கையிலே பிரிந்த உயிர்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் நுழையும் முன்னரே அந்தப் பெண் பயணி இருக்கையிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர், சடலத்தை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர்.
காவல்துறை விசாரணை
உயிரிழந்த பயணியுடன் வந்த அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள், குடியுரிமை மற்றும் சுங்கச் சோதனைகள் போன்ற உரிய நடைமுறைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர், உயிரிழந்த பயணியின் உடல், காவல் துறைப் பாதுகாப்புடன் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட தூர விமானப் பயணத்தின்போது நடுவானில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத மரணம், சக பயணிகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.