தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யின் அரசியல் வருக,. த.வெ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி, அ.தி.மு.க.. பா.ஜ.க. ஆகியவற்றின் வியூகம் ஆகியவற்றை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


மருத்துவர் மீது கொலை முயற்சி:


கடந்த சட்டசபைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் கோரிக்கைகள், மகளிர் உரிமைத் தொகை குளறுபடி என பல நெருக்கடிகளை ஆளுங்கட்சி சந்தித்து வருகிறது.


இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் தமிழக அரசுக்கு அடுத்தடுத்து தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக மருத்துவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


ஆசிரியை கொலை:


இந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அ.தி.மு.க, பா.ம.க., த.வெ.க. என பல கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில், தஞ்சையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் அரசுப்பள்ளியில் வகுப்பறையின் உள்ளே புகுந்து இளம் ஆசிரியையை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.


வழக்கறிஞர் வெட்டி சாய்ப்பு


தஞ்சையில் ஆசிரியை ரமணி பள்ளியின் உள்ளே புகுந்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் சில மணி நேரத்திலே ஓசூரில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் சாலையில் ஓட, ஓட விரட்டி வெட்டப்பட்டார். அவர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை செய்தவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.


மு.க.ஸ்டாலினுக்கு தலைவலி:


தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்த ஏடிஎம் கொள்ளைகள். ஆம்ஸ்ட்ராங் படுகொலை, அவ்வப்போது நடக்கும் குற்றச் சம்பவங்கள் ஆகியவைகள் ஆட்சிக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மருத்துவர் மீதான கொலைமுயற்சி தி.மு.க. அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், ஒரே நாளில் மாணவ மாணவிகளின் கண் முன்னே ஆசிரியை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் வெட்டப்பட்டிருப்பதும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


குற்றப்பின்னணி இல்லாத ஒருவர் திடீரென குற்றம் செய்வதற்கு அரசு பொறுப்பேற்கா முடியாது என்றாலும், குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுவும் பள்ளியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பதால் வருங்காலங்களில் பள்ளி, மருத்துவமனை என எந்தவொரு பொது இடத்திலும் கொலை போன்ற குற்றச் சம்பவங்களை எடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.