செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே காதலன் இறந்த துக்கம் தாளாமல், அவரது காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது. வண்டலூர் அடுத்த சுவாமி விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா (25). இவர் வீட்டிலேயே சமையல் வேலை செய்து, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்து வந்தார்.

Continues below advertisement

கார்த்திகாவின் தந்தை உயிரிழந்த நிலையில், அவர் தனது தாய் விஜயலட்சுமியுடன் வசித்து வந்தார். விஜயலட்சுமி நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நிலையில், 'ஆன்லைன்' உணவு 'டெலிவரி' ஊழியர் ஒருவர், ஆர்டரை கார்த்திகாவிடம் ஒப்படைப்பதற்காக அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், வீடு பூட்டியிருப்பதாகவும், கார்த்திகா மொபைல் போனை எடுக்க மறுப்பதாகவும் விஜயலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

கதவை உடைத்து மீட்ட போலீஸ்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, உடனடியாக தன் வீட்டின் அருகே வசிக்கும் நபரைத் தொடர்பு கொண்டு, 'கார்த்திகா என்ன செய்கிறாள்' என்று பார்த்து விபரத்தைக் கூறுமாறு கேட்டுள்ளார். அதன்படி, பக்கத்து வீட்டு நபர் வந்து வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. பின்னர், வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, கார்த்திகா படுக்கை அறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஓட்டேரி போலீசார் வீட்டின் கதவை உடைத்து, கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

தற்கொலைக்கான காரணம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கார்த்திகாவும் அவரது காதலனும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவின் காதலன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். காதலன் இறந்த துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத கார்த்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)