சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த பெண் மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 23 வயதான அவருக்கு வளசரவாக்கத்தில் உறவினர்கள் உள்ளனர். அவர்களைச் சந்திப்பதற்காக விடுமுறை காலத்தில் சென்னைக்கு வருவதை அந்த பெண் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்தரங்க புகைப்படம்:


அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமானவர் சுஜித். அவருக்கு வயது 27. இவர் இன்ஸ்டாகிராமில் அந்த கல்லூரி மாணவியிடம் நெருங்கி பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மாறியுள்ளது.


இந்த சூழலில், சுஜித் அந்த பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அந்த பெண் இல்லை என்று கூறியதும் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பரவிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அந்த மாணவி பணம் கொடுக்காமல் இருந்த நிலையில், ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் அந்த கல்லூரி மாணவியிடம் அந்தரங்க புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவோம் என்று சுஜித் மிரட்டியுள்ளார்.

தந்தை, மகன் கைது:


இதில் வேதனைக்குரிய விஷயமாக சுஜித்தை கண்டிக்க வேண்டிய அவரது தந்தை வின்சென்டும் இணைந்து அந்த கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், கல்லூரி மாணவி மிக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். அந்த பெண் பணம் தராததால் அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமல் சுஜித் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து, வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.


அவரின் புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மேக்குவளைவிடு கிராமத்தைச் சேர்ந்த  27 வயதான சுஜித்தையும், 55 வயதான அவரது தந்தை வின்சென்டையும் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு:


சுஜித் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும் தற்போது மாவுக்கடை ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது தந்தை  வின்சென்ட் கூலித்தொழிலாளி ஆவார். கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டி தந்தையும், மகனும் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜித் மற்றும் வின்சென்ட் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.