கடந்த 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 2019  மே மாதம் இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி,  வெற்றிபெற்று 5வது முறையாக எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து, அவருக்கு திமுக ஆட்சியின் கீழ் உள்ள அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.


இந்த சூழலில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி அவரை கைது செய்தது. அப்போது, அவருக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இது தொடர்பாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், செந்தில் பாலாஜியை வருகின்ற 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர்  சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில், நீதிமன்ற காவலில் உள்ளார். 


தற்போது, அமலாக்கத்துறையினர் தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்ததாக செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. 


இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இது மீண்டும் ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது. 


செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விவரம்: 


கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.


இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்தனர். அந்த வழக்கானது தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினார். இப்படியான சூழ்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.