சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 842 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, ஏற்கனவே எழும்பூர் - தஞ்சாவூர் மார்க்கத்தில் இயங்கும் உழவன் எக்ஸ்பிரஸ் உட்பட 9 விரைவு ரயில்களின் சேவைகளில் நாளை முதல் 20-ம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Continues below advertisement

இதன் தொடர்ச்சியாக, கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில மின்சார ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு மற்றும் பகுதி நேர ரயில் ரத்து விவரங்கள்

ஆகஸ்ட் 22 முதல் 30 வரை உள்ள நாட்களில், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11:20, 11:40 மற்றும் 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல சில ரயில்கள் பகுதி நேரமாக மட்டுமே இயக்கப்படும். அதன்படி, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 3:50 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் கூடுவாஞ்சேரியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 10:15 மற்றும் 11:20 மணி ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 10:20 மற்றும் 11:20 மணி ரயில்களும் தாம்பரம் வரையிலேயே இயங்கும்.

Continues below advertisement

ஆகஸ்ட் 16 மற்றும் 23 தேதிகளில் கூடுதல் சேவை மாற்றம்

இவை தவிர, ஆகஸ்ட் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் 11:20, 11:40, 11:59 மணி ரயில்களும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் இரவு 11:00 மற்றும் 11:40 மணி ரயில்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன. எனவே ரயில் பயணிகள் அனைவரும் இந்தச் சேவை மாற்றங்களை அறிந்து, அதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.