தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் நடிகர் கருணாஸ். இவர் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இவர் சென்றபோது இவரையும், இவரது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள்:
அப்போது, அவரது கைப்பையைச் சோதனை செய்தபோது அலாரம் ஒலி எழுப்பியது. அப்போது, அவரது கைப்பையை சோதனை செய்த அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் 40 துப்பாக்கிக் குண்டுகள் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தன்னிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் உள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக திருச்சி செல்ல வேண்டிய விமானம் 30 நிமடங்கள் தாமதமாக சென்றது.
துப்பாக்கித் தோட்டாக்கள் வந்தது எப்படி?
இதன்காரணமாக, கருணாஸின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது சொந்த பாதுகாப்புக்காக முறையான உரிமம் பெற்று கை துப்பாக்கியை தான் வைத்திருப்பதாகவும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தனது கைத் துப்பாக்கியை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 40 லைவ் குண்டுகள் மட்டும் தவறுதலாக கைப்பையில் இருந்து விட்டது என்றும் கூறினார். அதோடு அவர் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒப்படைத்ததற்கான ஆவணங்களையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டினார்.
காரிலே சென்ற கருணாஸ்:
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதால், அவரிடம் இனிமேல் இதை போல் விமான சட்ட விதிகளுக்கு மாறாக துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்துச் செல்ல கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்திவிட்டு, பறிமுதல் செய்த துப்பாக்கிக் குண்டுகளை, மீண்டும் நடிகர் கருணாஸிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நடிகர் கருணாஸ், தான் காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டு செல்வதாக கூறிவிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.