Chennai Air Show 2024 Tickets: சென்னையில் நடைபெற உள்ள விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்கான, டிக்கெட் பெறுவது, அதன் விலை தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


விமானப்படையின் சாகச நிகழ்ச்சி:


இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் சென்னையில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, மெரினா கடற்கரையில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இதற்கான பயிற்சியை விமானப்படை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், சென்னை வான்பரப்பில் நண்பகல் நேரங்களில் விமானங்கள் சீறிப்பாய்ந்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் 6ம் தேதி நடைபெற உள்ள பிரதான காட்சியை நேரில் காண்பது எப்படி என்பதற்கான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  அதன்படி, இந்திய விமானப்படையின் சென்னை ஏர் ஷோ 2024-க்கான டிக்கெட் விலை, டிக்கெட் முன்பதிவு, பாஸ் விலை, நடைபெறும் இடம் மற்றும் நிகழ்ச்சியின் நேரம் போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


சென்னை ஏர் ஷோ 2024:


விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசால் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அக்டோபர் 5 ஆம் தேதி நிகழ்ச்சியின் ஒத்திகை நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி பிரதான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம். மொத்தம் 72 விமானங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இதனை நேரில் கண்டுகளிக்க 15 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த சாகச நிகழ்ச்சி, உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள சங்கம் பகுதியில் நடைபெற்றது.


சென்னை ஏர் ஷோவின் சிறப்பம்சங்கள்:


ஏர் ஷோவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஸ்டண்ட் மற்றும் நிகழ்ச்சிகளையும்,  இந்திய விமானப்படையின் எலைட் அணிகள் நிகழ்த்த உள்ளன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அவற்றின் மூலம், 



  • ஸ்கைடிவிங் திறன்

  • ஆகாஷ் கங்கா.

  • சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு

  • க்ளோஸ் ஃபார்மேஷன் லையிங்

  • சாரங் ஹெலிகாப்டர் காட்சி குழு

  • ஸ்டன்னிங் ஏரியல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட உள்ளன.


டிக்கெட் விலை, முன்பதிவு செய்வது எப்படி?


விமானப்படையின் இந்த பிரமாண்டமான சாகச நிகழ்ச்சியை, எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினால், அக்டோபர் 6ம் தேதியன்று முடிந்த அளவிற்கு விரைவாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். பொதுமக்களின் நுழைவில்,  முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீக்கிரமாக வந்தால், இங்கு சிறப்பிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க சரியான இடம் கிடைக்கும். மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் இரண்டு நுழைவு வாயில்கள் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தை நீங்கள் பெறலாம். மேலும் தேசத்திற்காக இந்திய விமானப்படை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நீங்கள் மிக நெருக்கமாக அறிந்துகொள்ளலாம்.