ஆபரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் டெட் என்றொரு பிரபலமான காமெடி உண்டு. அதில் வரும் நிகழ்வைப் போல, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வுக்குப்பின் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல், நெரிசலில் நிற்கின்றனர்.


காலை 7 மணி முதலே குவிந்த மக்கள்


இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நிகழ்வுகள் வண்ணகரமாக நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு முன்னதாக, போலீஸாரும் சென்னை மாநகராட்சியும் இணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். காலை 7 மணி முதலே நிகழ்வு நடைபெறும் இடத்தில் குவிந்தனர். பார்க்கிங் வசதி தனியாக பல்வேறு சாலைகளில் செய்யப்பட்டு இருந்தது.


காலையில் முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கட்டுக்குள் இருந்தது. மக்களும் வெவ்வேறு நேரங்களில் கடற்கரைக்கு வந்ததால், காவல் துறையினர் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருந்தது.


திரும்பச் செல்லும்போது இல்லாத போலீஸார்


எனினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது.


நண்பகலில் வெயிலும் கொளுத்தியதால், வியர்வை வழிந்து ஆறாகப் பெருகி ஓடியது. வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் அந்த நேரத்தில் எங்கும் விற்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சிலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். 


மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்


காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், சேப்பாக்கம், விவேகானந்தர் சாலை, வாலஜா சாலை, அண்ணா சாலை, கலங்கரை விளக்கம், சாந்தோம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதனால் ஏராளமான மக்கள் எழிலகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அருகில் உள்ள வீடுகளில் சென்று தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, தாகம் தணித்தனர்.


விமான சாகச நிகழ்ச்சியைச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்திய தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் திரும்பச் செல்லும்போது போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.  இவ்வளவு பெரிய நிகழ்வை பார்க்க வரும் மக்களுக்கும், நின்று நிதானித்து செல்லும் பொறுமை இல்லாமல் அரசை குற்றம் சாட்டுகிறார்கள் என்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் மெரினாவை குப்பை கூளமாக்கி மக்கள் செல்கிறார்கள் என சுற்றுப்புற ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்